டிரெண்டிங்

திருவாரூர் இடைத்தேர்தல் - முதலாவதாக வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி

திருவாரூர் இடைத்தேர்தல் - முதலாவதாக வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி

webteam

திருவாரூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுவைத் திரும்ப பெறலாம் எனவும் மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14 ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31 ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிர மும்முரம் காட்டி வருகின்றன. ஜனவரி 4 ஆம் தேதி திமுக, வேட்பாளரை அறிவிக்கும் எனவும் அதே ஜனவரி 4 ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பரிசீலனை நடைபெறும் எனவும் அக்கட்சிகளின் தலைமைகள் கூறியுள்ளன.

இந்நிலையில், திருவாரூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலுக்கு முதல் கட்சியாக வேட்பாளரை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.