டிரெண்டிங்

சந்தைக்கு வரும் முன்னே விதிகளை மீறி சோதனை ஓட்டமாக கொடைக்கானல் வந்த சொகுசு கார்.!

சந்தைக்கு வரும் முன்னே விதிகளை மீறி சோதனை ஓட்டமாக கொடைக்கானல் வந்த சொகுசு கார்.!

kaleelrahman

இன்று வரை சந்தையில் அறிமுகப்படுத்தப்படாத, சாலையில் ஓட்ட அனுமதியில்லாத சொகுசு காரில், சென்னை முதல் கொடைக்கானல் வரை வந்து, காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய தனியார் நிறுவன காரை காவல் நிலையத்தில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிரபல கார் நிறுவனத்தின் புத்தம் புதிய மாடல் சொகுசு கார், இன்று வரை சந்தையில் அறிமுகப்படுத்தப்படாத மற்றும் இந்திய சாலைகளில் வெளிவராமல் உள்ள இந்த சொகுசு கார், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையது. இந்த சொகுசு காரை, சென்னையில் இருந்து கொடைக்கானல் வரை சோதனை ஓட்டம் என்ற பெயரில், பயணிகளுடன் ஓட்டிவந்து, கொடைக்கானல் ஏரிச்சாலையில் தாறுமாறாக ஓட்டி, உள்ளூர் வாகனத்தை இடித்து சேதப்படுத்தியதாக, சாலையில் இருதரப்பினருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சொகுசு காரை ஓட்டி வந்தவர்களையும், பாதிப்படைந்த காரின் உரிமையாளரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த கார் இன்று வரை, சாலைகளில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே கொடைக்கானல் வரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

சோதனை ஓட்டத்திற்கு சில கிலோமீட்டர் வரை மட்டுமே ஓட்ட முடியும் என்ற சட்டம் இருந்தும், பல நூறு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு பயணிகளுடன் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.