ஜனநாயகத்தை காக்கும் போரில், மம்தா பானர்ஜி உடன் துணை நிற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு, சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தாவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், மம்தாவிற்கு ஆதரவு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில், “பாசிச பாஜக ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகள் அனைத்தின் சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் போரில், மம்தா பானர்ஜி உடன் துணை நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், “பாஜக நேர்மையற்ற வழியில் மீண்டும் ஆட்சிக்கு வர விரும்புகிறது. தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் அவர்கள் உள்ளார்கள். சிபிஐ தேர்தல் ஏஜெண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பிற்கு எதிரானது. சிபிஐ-யை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு பேசி, கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க அவர் நடத்தும் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்