ஜெயலலிதாவிடம் தோற்றுப்போனவர்களும், துரோகம் இழைத்தவர்களும் ஆட்சியை அசைத்து பார்க்கலாம் என கனவு காண்பதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பொன்னேரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் 'ஜாதகம் சரி இல்லாதவர்கள் ஆட்சி நீடிக்குமா என ஜோதிடம் பார்க்கின்றனர். துணை முதல்-அமைச்சரும், முதல்-அமைச்சரும் பதவி விலக வேண்டுமாம். எதற்காக?, ஒரு குடும்பத்தின் ஆட்சி இருக்கக் கூடாது என்று சொன்னதற்காக, துணை முதலமைச்சர் பதவி விலக வேண்டுமாம். விசுவாசத் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று, அந்தக் குடும்பத்தை விலக்கிவைத்ததற்காக, முதலமைச்சர் பதவி விலக வேண்டுமாம். கடவுளுக்குப் பூஜை செய்ய, மல்லிகைப் பூ இருக்கலாம். ரோஜாப் பூ இருக்கலாம். சாமந்திப் பூ இருக்கலாம். ஆனால், ஊமத்தம் பூ இருக்கக் கூடாது.
நமது வெற்றிச் சின்னமான இரட்டை இலையில், ஒரு இலையில், எம்.ஜி.ஆரைப் பார்க்கிறோம். ஒரு இலையில், ஜெயலலிதாவைப் பார்க்கிறோம். அந்த இரட்டை இலை நம்மிடம் வரும், தொடர்ந்து நல்லாட்சி தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், ஜெயலலிதாவின் வழியிலே, நாங்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதாவின் மேல், பாசம் வைத்திருக்கும் தமிழக மக்களுக்கும், விசுவாசத் தொண்டர்களுக்கும், யாராவது தீங்கு செய்ய நினைத்தால், மக்கள் அவர்களின் துரோகத்தை தடுத்து நிறுத்துவார்கள்’ எனத் தெரிவித்தார்.