புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு பரிந்துரை செய்ததால் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் மனுக்கள் வாபஸ்.
புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியதில் மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அரசியல் காரணங்களுக்கான கொள்கை முடிவுகளால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். புதிய தலைமைச்செயலக கட்டட முறைகேடு குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்ததன் மூலம் 5 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார்.
தங்கள் பணம் வீணடிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்ப ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை இருப்பதாகவும் விசாரணையின் போது நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்தார். மேலும், புதிய தலைமைச்செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு பரிந்துரைத்ததால், திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தங்களது வழக்குகளை வாபஸ் பெற்றனர். அதனால், புதிய தலைமைச்செயலகம் தொடர்பான மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.