டிரெண்டிங்

காதல் கணவனோடு சேர்த்து வையுங்கள்... கை குழந்தையுடன் கணவன் வீட்டின் முன் பெண் தர்ணா

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பச்சிளம் குழந்தையோடு பெண் இன்ஜினியர், கணவனின் வீட்டு முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். 


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தியா. பி.இ.எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகியமண்டபம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான ரஜீஷ் என்ற டெம்போ ஓட்டுனரை காதலித்துள்ளார்.

இந்நிலையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அதன் காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தியா கர்ப்பமானார். இதுகுறித்து காதலன் ரஜீஷிடம் தெரிவித்ததில் இருந்து ரஜீஷ் இவரிடமிருந்து இடைவெளி விட துவங்கினார். இதனால் உஷாரான சந்தியா பெற்றோரிடம் தனது நிலைமையை எடுத்துரைத்து ரஜீஷ் தன்னிடமிருந்து நழுவ முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். 


இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் ரஜீஷ் பெற்றோர்களிடம் பேசி இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்தனர்.ரஜீஷ்  வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கவே பெண் வீட்டாரின் வேண்டுதலுக்கு ஒத்துழைத்த ரஜீஷ் வீட்டை விட்டு வெளியேறி சந்தியாவின் வீட்டருகே உள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதோடு அரசு விதிமுறைப்படி பதிவும் செய்து கொண்டனர். அதன் பின்னர் ரஜீஷ் சந்தியாவை சந்திப்பதை தவிர்த்து விட்டு கேரளாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

திருமணம் செய்து கொண்ட பின்னரும் தன்னை கைகழுவ முயற்சிக்கும் ரஜீஷ் திட்டத்தை புரிந்து கொண்ட சந்தியா ரஜீஷை தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். எனினும் அவரோடு சேர்ந்து வாழ தயாரில்லாத ரஜீஷ் சந்தியாவை பார்ப்பதையே தவிர்த்து வெளி ஊரிலேயே தங்கிவிட்டார். 


இதற்கிடையே சந்தியாவிற்கு குழந்தை பிறந்த நிலையில் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை புரிந்து கொண்டு ரஜீஷ உடன் சேர்ந்து வாழ காவல்துறையின் உதவியை நாடினார். தக்கலை காவல்நிலையம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என ஒவ்வொரு அலுவலகத்திற்கும் ஏறி இறங்கினார்.

இதனால் ரஜீஷ்க்கு நெருக்கடி அதிகரிக்கவே என்ன ஆனாலும் சந்தியாவோடு சேர்ந்து வாழ தயார் இல்லை என்பதில் உறுதியாக இருந்து சந்தியாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதோடு வீட்டாரின் விருப்பத்திற்கு இணங்க வேறு திருமண ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிகிறது. அதை ஏற்க மறுத்த சந்தியா தற்போது ரஜீஷின் வீட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.


தற்போது ரஜீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த வீட்டில் இருந்து மாயமாகி உள்ள நிலையில் ரஜீஷை மீட்டு தன்னோடு சேர்த்து வைக்குமாறு காவல்துறையை வலியுறுத்தி சந்தியா தனது பச்சிளம் குழந்தையுடன் அந்த வீட்டில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.