உதயநிதி ஸ்டாலின் திமுகவின் வருங்காலம் என, அக்கட்சியின் எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை, போரூரில் நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர். பாலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டி.ஆர்.பாலு தனது உரையைத் தொடங்கும்போது, உதயநிதி ஸ்டாலினை சுட்டிக்காட்டி, ‘இயக்கத்தின் இளந்தென்றல்’ என்றும், ‘கழகத்தின் வருங்காலம்’ மற்றும் ‘இயக்கத்தின்’ எதிர்காலம் என்றும் புகழ்ந்து பேசினார்.
சமீப காலமாக அரசியல் மேடைகளில் தென்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், மக்களவைத் தேர்தலின்போது திமுகவிற்காக தீவிர பரப்புரையும் மேற்கொண்டார். இதேபோல் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்குமாறு, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் கடிதம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் திமுகவின் வருங்காலம் உதயநிதி ஸ்டாலின் என டி.ஆர்.பாலு புகழ்ந்து பேசியுள்ளார். எனவே உதயநிதி விரைவில் அரசியலில் கால் பதிப்பார் என்றும் கூறப்படுகிறது.