கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரமேஷ்பாபு என்பவர் ஆவணமின்றி எடுத்துவந்த இரண்டு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இங்கிலாந்து, ஐரோப்பா, குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட இரண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ஐந்து லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வழியாக வந்த கோழித் தீவனம் மற்றும் வாழைத்தார் வியாபாரிகளிடம் சோதனை நடத்தியதில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 17ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், ஜெகதீசன் என்பவர் வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 3 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதாக வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். குலசேகரன்பட்டிணம் - உடன்குடி இடையே தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, துணிக்கடை உரிமையாளர் விக்னேஷ் என்பவர் ஆவணமின்றி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தையும் பறக்கும் படையினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.