திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பரும், திமுக பகுதி செயலாளருமான சீனிவாசனின் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். அதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர். மேலும், வேலூரில் உள்ள சிமென்ட் குடோனில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த சோதனைக்கு இரு தினங்களுக்கு முன் காட்பாடி-காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். மேலும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் அவரது பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.மேலும் இதுகுறித்து பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வருமான வரித்துறை அளிக்கும் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பப்படும் என்றார்.
இந்நிலையில் வேலூரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவிதுள்ளார். மேலும் ஆதாரம், ஆவணங்கள் அடிப்படையிலேயே சோதனை நடைபெற்றதாவும், தமிழகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.