ஜனநாயக படுகொலைக்கு ஒட்டுமொத்த சொந்தக்காரர்கள் திமுக தான் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஜெயலலிதா ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதில் டிடிவியும் ஸ்டாலினும் கூட்டாக செயல்படுகின்றனர். ஜனநாயக படுகொலை என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. மல்லாந்து படுத்துக் கொண்டு காரி உமிழக் கூடாது. முதலில் தனது முதுகில் உள்ள அழுக்கினை தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர் ஊரை சுட்டிக்காட்ட வேண்டும். ஜனநாயகக் படுகொலைக்கு ஒட்டுமொத்த சொந்தக்காரர்கள் திமுக தான். கடந்த காலத்தில் திமுக, சட்டமன்றத்தில் எம்ஜிஆர்-ரை அவமானப்படுத்தினார்கள். ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் அடித்து உதைத்து சேலையெல்லாம் பிடித்து, எப்படியெல்லாம் மானபங்கம் படுத்த முடியுமே அப்படி அசிங்கப்படுத்தினார்கள்.
இவர்கள் ஜனாநாயக படுகொலை பற்றி பேசுவது வேடிக்கையானது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து பேசுவது மரபல்ல.. முறையல்ல.. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறினால் உண்மையாகி விடும் என டிடிவியும் ஸ்டாலினும் நினைக்கின்றனர் என்றும் அவர் கூறினார். மேலும் அரசு மூழ்கும் கப்பல் என சிதம்பரம் பேசுவது வேடிக்கையானது என்றும், காங்கிரஸ் கட்சியே மூழ்கித்தான் இருக்கிறது. அதனை தூக்கிவிட ஆட்களே இல்லை" என்றார்.