டிரெண்டிங்

திமுக வேட்பாளர் வெற்றிபெற திருத்தணி கோயில் படிகளில் முட்டிபோட்டு ஏறிய திமுகவினர்

திமுக வேட்பாளர் வெற்றிபெற திருத்தணி கோயில் படிகளில் முட்டிபோட்டு ஏறிய திமுகவினர்

kaleelrahman

திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி பெற, திமுக கிளை செயலாளர் மற்றும் திமுகவினர் 20 பேர் திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்திலிருந்து 365 படிக்கட்டுகளில் முட்டி போட்டு ஏறி வெற்றி பெற வேண்டிக் கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இந்த தொகுதியில் களம் காண்கிறது. திருத்தணி தொகுதியில் 3 முறை நகர் மன்றத் தலைவராக இருந்த சந்திரன் என்பவர் போட்டியிடுகிறார். வேட்பாளர் சந்திரன் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் திருத்தணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரன் வெற்றி பெற, ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அடிவாரத்திலிருந்து மலை வரை உள்ள 365 படிக்கட்டுகளிலும் பாலாபுரம் திமுக கிளை செயலாளர் சந்திரசேகர் மற்றும் திமுக தொண்டர்கள் 20 பேர் முட்டி போட்டு படிக்கட்டில் ஏறி வேண்டிக் கொண்டனர்.

தொடர்ந்து அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே இந்த தொகுதியை தக்க வைத்து வந்த நிலையில் இந்த முறை திமுக நேரடியாக களம் காண்பதால் திமுக மற்றும் அதிமுகவினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் வேண்டிய வரம் தரும் முருகன் கோயிலில் திமுக தொண்டர்கள் முட்டி போட்டி படியேறியதால் திமுக வேட்பாளர் சந்திரன் வெற்றி பெறுவது நிச்சயம் என திமுகவினர் தெரிவித்தனர்.