டிரெண்டிங்

புதுக்கோட்டை : மகனின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய தம்பதி..!!

புதுக்கோட்டை : மகனின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய தம்பதி..!!

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொரோனா விழிப்புணர்வு முயற்சியாகவும் பசுமையை காக்கும் நோக்குடனும் மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கியதோடு மருத்துவமனையைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டு இரண்டு வயது சிறுவனின் பிறந்தநாள் விழாவை அவரது பெற்றோர்கள் கொண்டாடியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாமஸ் - ரேவதி தம்பதியினர். இன்று இவர்களது மகன் துருவனின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் விழாவை ஆடம்பரமாக கொண்டாத அந்த தம்பதியினர் தனது மகனின் பிறந்த நாளில் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முகக்கவசம் இல்லாமல் சிகிச்சைக்கு வந்த நபர்களுக்கு அந்த சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்கள் இணைந்து முககவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கி கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதன்பின் அந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளையும் இயற்கையும் பாதுகாத்து வரும் கொத்தமங்கலம் இளைஞர்கள் நற்பணி மன்ற அமைப்புடன் இணைந்து மருத்துவமனை வளாகத்தை சுற்றி மரக் கன்றுகளையும் நடவு செய்தனர்.

பின்பு அனைவருக்கும் கடலைமிட்டாய் வழங்கப்பட்டு சிறுவனின் பிறந்தநாள் விழாவை வினோதமாக கொண்டாடினர். கடந்த ஆண்டு இதே போல் இந்த சிறுவனின் பிறந்தநாளன்று அந்த கிராமத்து இளைஞர்களால் தூர்வாரப்பட்ட நீர்நிலையில் மரக்கன்றுகள் வைத்து வித்தியாசமான முறையில் பிறந்த நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

கொத்தமங்கலம் கிராமத்தில் இதேபோன்று பலரும் திருமணம் மற்றும் பிறந்தநாள் விழாவின் போது நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டும் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் மரக்கன்றுகளை நடவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தாமஸ்-ரேவதி தம்பதியினரும் தனது மகனின் பிறந்தநாளை இந்த ஆண்டு கூடுதலாக கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு மரக் கன்றுகளையும் நட்டது காண்போரை கவர்ந்தது.