கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து உண்மைக்கு புறம்பாகப் பேசியதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 20ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் பரப்புரையில் உண்மைக்கு மாறான தகவல்களை பேசியதாகக் கூறி தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரியின் பரிந்துரையின்படி, திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாஸ், திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை ஏற்ற திருவாரூர் காவல்துறையினர், உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புதல் போன்ற பிரிவின் கீழ் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தபோது, அச்சம்பவம் குறித்து யாரும் பேசவோ, எழுதவோ கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.