மதுரையில் காதல் தோல்வியால் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த பாண்டியராஜன் என்ற இளைஞர் 3 மாதத்திற்கு முன்னர், காதலித்த மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணை அழைத்துச் சென்று திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் பெண்ணின் உறவினர்கள் பாண்டியராஜனை தாக்கிவிட்டு பெண்ணை அழைத்து சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் விரக்தியில் இருந்த பாண்டியராஜன் எலி மருந்தை உட்கொண்ட நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறைக்கு வந்தார்,
இதனையறிந்த செய்தியாளர்கள் அவரை மீட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர், பாண்டியராஜனை சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர், மேலும் பாண்டியராஜன் தற்கொலை முயற்சி குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.