டிரெண்டிங்

திருச்சியில் சினிமா பாணியில் கடத்தப்பட்ட சிறுவன்... சிசிடிவியை வைத்து வளைத்த போலீஸ்

kaleelrahman

திருச்சி கண்டோன்மெண்ட் வார்னர்ஸ் சாலையில் உள்ள வீட்டின் வாசலில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் திடீரென கடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 


தொழிலதிபரின் பேரன் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது கார் ஒன்று அங்கு வந்தது. கடத்தல்காரர்கள் காரை நிறுத்தி நிதானமாக சிறுவனை கடத்தி திட்டத்தை செயல்படுத்தினர். அந்தக் காட்சிகள் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவற்றை பார்க்கும்போது கடத்தல் நன்றாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என்றே தெரிகிறது.

சிறுவனின் பெற்றோர், தாத்தா, உறவினர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொண்டதை அடுத்து, சில மணி நேரங்களில் கடத்தல்காரர்கள் தொடர்பில் வந்தனர். சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் 6 கோடி ரூபாய் தந்தால் உங்கள் மகனை உயிருடன் விடுவோம், இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று சினிமா பாணியில் மிரட்டினர். மிரண்டுபோன சிறுவனின் பெற்றோர், அவ்வளவு தொகை தங்களால் தர முடியாது என்று கூறியுள்ளார். அதற்கு, உங்கள் மகனின் கை தான் கிடைக்கும் என்று போனிலேயே மிரட்டல் விடுத்துள்ளனர்.


பயந்துபோன சிறுவனின் பெற்றோர் உடனடியாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் சிறுவன் கடத்தப்பட்ட வாகனத்தில் இருந்து விசாரணையை தொடங்கினர். சிசிடிவி கேமரா மூலம் கார் பயணித்த வழியை கண்டறிந்தனர். அந்த வாகனம் வயலூர் சாலையில் சென்று கொண்டிருப்பதை அறிந்த போலீஸார், காரை பின்தொடர்ந்து வளைத்து பிடித்தனர்.


போலீஸ் பின்தொடர்வதை கண்ட கடத்தல்காரர்கள் ராமலிங்க நகர் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து சிறுவனை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் போலி பதிவெண் மூலம் சிறுவனை கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்துகின்றனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர். திருச்சியின் மிக முக்கிய தொழிலதிபரின் பேரன் கடத்தப்பட்டதால், தொழில் போட்டியா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.