டிரெண்டிங்

'தமிழகத்தில் பாஜகவுக்கு எங்குமே டெபாசிட் கிடைக்காது' - ஈவிகேஎஸ் இளங்கோவன்

JustinDurai

அதிமுகவுடன் கூட்டணியில் இல்லாததால் பாஜக தமிழகத்தில் எங்குமே டெபாசிட் பெறாது எனத் தெரிவித்துள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அரசு பள்ளியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் எம்எல்ஏ திருமகன் ஈவேரா ஆகியோர் வாக்கு செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ''ஈரோட்டை பொருத்தவரை வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் வாக்கு செலுத்தவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது திமுக கூட்டணிக்கு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை தரப்போகிறது. திமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் ஸ்டாலினின் கரத்தை பலப்படுத்த வேண்டும் என்பதை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றனர். மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்க தொடங்கியதில் இருந்து , தமிழகத்தை மத்திய அரசிடம் இருந்து காப்பாற்றக்கூடிய வலிமையும் சக்தியும் கொண்ட ஒரே முதல்வர் ஸ்டாலின் என்ற முறையில் தமிழர்களின் மானம், சமூக நீதி, சுய மரியாதை, கலாசாரம் காப்பற்றப்படவேண்டும் என்ற மன ரீதியில் மக்கள் இருக்கின்றனர்.

திமுக பொய்யான பிரசாரம் செய்கின்றது  என சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி பொய்யான மனிதன். அவர் பொய்யை மட்டுமே பேசுபவர். கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளே செல்வது உறுதி. அதனால் தான் எதையெதையோ அவர் பிதற்றிக் கொண்டிருக்கிறார். பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இல்லாததால் தமிழகத்தில் எங்கும் டெபாசிட் பெற மாட்டார்கள்'' என்றார்.