டிரெண்டிங்

பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் சிசு... மூட்டையில் சுற்றி விட்டுச் சென்ற தாய்...

பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் சிசு... மூட்டையில் சுற்றி விட்டுச் சென்ற தாய்...

kaleelrahman

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே சாக்கு மூட்டையில் இருந்து பெண் சிசு உயிருடன் கண்டெடுக்கப்பட்டது.

திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை அருகே, யாத்ரி நிவாஸ் என்ற பெயரில் கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இதன் அருகே குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. அப்போது, ஸ்ரீரங்கம், கொள்ளிடக் கரை, பூசாரி தோப்பு பகுதியை சேர்ந்த சின்னத்துரை அப்பாவு என்ற ஆட்டோ ஓட்டுனர், குழந்தை அழுகுரல் சத்தத்தைக் கேட்டு, சத்தம் வந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாக்கு மூட்டையில் சுற்றப்பட்டு அங்கு இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர், அந்த குழந்தையை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காப்பாற்றப்பட்ட அந்த பெண் குழந்தை தற்போது நலமாக உள்ளதாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையை யாருக்கும் தெரியாமல் ஆற்றிலோ அல்லது குப்பையிலோ வீசி சென்றிருந்தால், நீரில் மூழ்கி அல்லது நாய் போன்ற மிருகங்கள் கடித்து அந்த குழந்தை இருந்திருக்கக்கூடும்.

அதேபோல், மூட்டையாகக் கட்டி வீசியதாலும் அந்த குழந்தை மூச்சு திணறி இருந்திருக்கக்கூடும் என்றாலும், அந்த குழந்தை உயிருடன் இருந்தது அதிர்ஷ்டம் தான் என்பதும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பிறந்து சிலமணி நேரத்திலேயே பெண் குழந்தை ஒன்றை மூட்டையாக கட்டி விட்டுச்சென்ற அந்த கல் நெஞ்சம் படைத்த தாய் யார் என்பது குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.