டிரெண்டிங்

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள், அன்புமணி மனுத்தாக்கல் 

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள், அன்புமணி மனுத்தாக்கல் 

webteam

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். 

தமிழகத்திலிருந்து காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல், வருகிற 18 ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பபெற 11ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 6 பேருக்கும் மேலாக யாரும் போட்டியிடவில்லை என்றால், அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.

பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்கள் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 பேரை தேர்வு செய்ய முடியும். இந்நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் கூட்டணி சார்பில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர். 

மூவரும் சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனுக்களை அளித்தனர். மனுத்தாக்கலின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். 

திமுக சார்பில், தொமுவைச் சேர்ந்த சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் சனிக்கிழமை தங்கள் மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும் திமுகவை சேர்ந்த இளங்கோவும் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.