டிரெண்டிங்

ஆடு, நாய்க்கு விவாகரத்து வேண்டும்: நூதன கோரிக்கை

ஆடு, நாய்க்கு விவாகரத்து வேண்டும்: நூதன கோரிக்கை

rajakannan

காதலர் தின எதிர்ப்பாளர்களால் தாலி கட்டப்பட்ட ஆடு, நாய்க்கு தாலி கட்டிய நபரிடம் இருந்து விவகாரத்து கேட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

காதலர் தினத்திற்கு எதிராக இந்து முன்னணி, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சில அமைப்புகள் கையில் தாலியுடன் சென்று காதலர்களை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு காதலர்கள் மீது தாக்குதல்களும் நடத்தினர். அதேபோல், காதலர் தின எதிர்ப்பாளர்கள் ஆடு, நாய், கழுதை உள்ளிட்ட விலங்குகளுக்கு தாலி கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.  

இந்நிலையில் கடந்த ஆண்டு இதே போல, நாய் மற்றும் ஆட்டிற்கு காதலர் தின எதிர்பாளர்களால் தாலி கட்டப்பட்டது. இதைஎதிர்த்து கடந்த ஆண்டிலேயே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், கோவை குடும்பநல நீதிமன்றத்தில் ஆடு, நாய்க்கு தாலி கட்டிய விவகாரம் தொடர்பாக இன்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு.ராமகிருஷணன் செய்தியாளர்களிடம் கூறும் போது, “இந்து மத வழக்கப்படி தாலி கட்டியவர் புருஷன் என்று அறியப்படும் நிலையில், இந்த ஆடு மற்றும் நாய்க்கு தாலி கட்டியவர்கள் தான் வாழ்நாள் முழுவதும் இவர்களை வைத்து வாழ வேண்டும். ஆனால் தாலி கட்டியவர்கள் ஆடு மற்றும் நாயை கைவிட்டுவிட்டனர். ஆதலால் தாலி கட்டியவர்களுடன் இந்த அலமேலு( ஆடு ), அஞ்சலியை( நாய் ) சேர்த்து வைக்க கடந்த ஆண்டு காவல் ஆணையரிடம் மனு அளித்தோம். காவல் ஆணையர் கடந்த ஒரு வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், இன்று அஞ்சலி மற்றும் அலமேலுவிற்கு விவகாரத்து தருமாறு மனு அளித்துள்ளோம்” என்றார். ஆடு, நாயுடன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நீதிமன்றத்திற்கு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.