டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கியுள்ளது சின்னபிள்ளை தனமான நடவடிக்கை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.பி.கலைராஜன், நாஞ்சில் சம்பத், பாப்புலர் முத்தையா, புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி ஆகிய 5 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை, தாங்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறினார். மேலும், “ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றுள்ளதால் தினகரன் பக்கம் சிலர் வருவார்கள் என்ற நோக்கத்தில் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். தினகரன் தலைமையில் மிகப்பெரிய மாற்றம் விரைவில் வரும். திமுகவுடன், நாங்கள் கூட்டணி வைத்தது உண்மையென்றால் அவர்கள் தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும்; ஆனால் திமுக டெபாசிட் இழந்துள்ளது. தோல்வி அடைந்துவிட்டதால் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆட்சியை களைப்பது என்றோ, அல்லது தினகரன் தலைமையில் ஒன்று சேர்வது என்று முடிவு எடுத்திருக்க வேண்டும். அதனைவிடுத்து பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டிவிட்டது என்று நினைக்குமாம். அப்படி எங்கள் மீது சின்னபிள்ள தனமா நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதனை மக்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கட்சிகாரர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வழக்கு நிலுவையில் உள்ளதால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் நடவடிக்கை நீதிமன்ற அவதிப்பு ஆகும்” என்றார்.
இது குறித்து கலைராஜன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், அதிகாரத்தில் உள்ளதால் எங்களை நீக்கியுள்ளதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவித்துள்ளனர் என்று கூறினார். மேலும், “துணைப்பொதுச் செயலாளர் தினகரனிடம் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை. அந்தப்பதவியை வைத்து எப்படி நீக்கினார்கள் என்று தெரியவில்லை. பொதுச் செயலாளர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை எதற்காக செய்திருக்கிறார்கள் என்றால், அவர்களுடைய கூடாரம் களைய போவதை தடுப்பதற்காக தக்க வைப்பதற்காக, ஆதரவாளர்களை தக்க வைப்பதற்காக, கட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்தி இருக்கிற நாடகம்தான் இது” என்றார்.