டிரெண்டிங்

மக்களவை துணை சபாநாயகர் பதவி எப்படி வந்தது? - தம்பிதுரை விளக்கம்

webteam

காங்கிரஸிற்கு அடுத்தபடியாக அதிக எம்.பிக்களை கொண்ட கட்சி என்பதின் அடிப்படையிலேயே மக்களவை துணை சபாநாயகர் பதவி அதிமுகவிற்கு வழங்கப்பட்டதாக தம்பிதுரை கூறியுள்ளார்.

மார்ச் மாத முதல் வாரத்தில் தேர்தல் அட்டவணை வெளியாகிவிடும் என்பதால் கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதி பங்கீடு செய்வதில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தை பொருத்தவரை திமுக காங்கிரஸுடன் கூட்டணி என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முரணான கருத்துக்களை அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை கூறி வருகிறார்.

பாரதிய ஜனதாவை தூக்கி சுமக்க நாங்கள் தயாராக இல்லை எனவும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது எனவும் தம்பிதுரை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்கு அதிமுக கொடுத்துள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும் பாஜக வழங்கிய மக்களவை துணை சபாநாயகர் பதவியில் தம்பிதுரை ஏன் உள்ளார் எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, காங்கிரஸிற்கு அடுத்தபடியாக அதிக எம்.பிக்களை கொண்ட கட்சி என்பதின் அடிப்படையிலேயே மக்களவை துணை சபாநாயகர் பதவி அதிமுகவிற்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

தாமாக முன்வந்து பாரதிய ஜனதா பதவியை அதிமுகவிற்கு வழங்கவில்லை எனவும் கூட்டணியில் இருப்பதால் பதவியை எங்களுக்கு தந்துவிட்டதாக கூறுவது தவறு எனவும் குறிப்பிட்டார்.

மேலும், “தமிழக பாஜகவினருக்கே இது தெரியும் எனவும் நாங்கள் பதவி தந்துவிட்டோம்; அதிலிருந்து விலக வேண்டும் என கூறுவது முறையல்ல. இது எதிர்கட்சிகளுக்கு கிடைக்கவேண்டிய பதவி. காங்கிரஸிற்கு கொடுக்க வேண்டாததின் காரணமாக முறைப்படி அதிமுகவிற்கு கிடைத்தது.” என தெரிவித்தார்.