டிரெண்டிங்

தம்பிதுரை இல்லம் முன் தர்ணா: 2 பேர் கைது

Rasus

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூரில் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை இல்லம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்குப் பின் தமிழகத்தில் நீட் எதிரானப் போராட்டம் வலுத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூரில் மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை இல்லம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான குட்டிராஜா, தினேஷ் ஆகியோர் ராமானுஜம் நகர் பகுதியிலுள்ள தம்பிதுரை வீட்டு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீட் தேர்வு என்பது முடிந்து போன விவகாரம் என்று முதலில் கூறியிருந்த தம்பிதுரை, பின் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நாடாளுமன்றத்தில் மீண்டும் குரல் கொடுப்போம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.