டிரெண்டிங்

''வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கே ரூ.2,000'' - தம்பிதுரை விளக்கம்

webteam

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறவே இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.

வறுமையில் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என்று கடந்த மாதம் 11-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அந்தத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. 

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 பயனாளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

இதனிடையே 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து மதுரையை சேர்ந்த தினேஷ் பாபு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறவே இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை பொங்கல் பரிசு போல், அனைவருக்கும் கிடைக்காது என கூறிய தம்பிதுரை, இத்திட்டம் மூலம் வசதிப்படைத்தோரும் பலன் பெறும் சூழல் நிலவுவதாக தெரிவித்தார். திமுக ஆட்சியின்போது, வசதி படைத்தவர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.