டிரெண்டிங்

“எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா?” - தம்பிதுரை

webteam

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தன் மீது அபாண்டமாகக் குற்றஞ்சாட்டுவதாகவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் ஸ்டாலின் பதவி விலகத் தயாரா என்றும் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்‌ தம்பிதுரை, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சிப் பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் ‌செய்தியாளர்களி‌டம் பேசிய அவர் திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் ஜோதிமணி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் நான் 45 கல்லூரிகள் வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். அவர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும். 

குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக நான் தயார். நிரூபிக்காவிட்டால் ஸ்டாலின் பதவி விலகத் தயாரா? அரசுதான் இலவசமாக கல்வி வழங்க முடியும். தனிநபர் ஒருவர் இலவசமாக கல்வி வழங்க முடியாது. கருப்பு பணம் இருந்தால்தான் இலவசமாக கல்வி வழங்க முடியும். என்னிடம் கருப்பு பணம் கிடையாது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி. இருப்பினும் என் மீது ஏதாவது பொய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக இது போன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செய்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கதக்கது