டிரெண்டிங்

“மத்தியில் தமிழகத்திற்கு சாதகமான ஆட்சி வரப்போகிறது” - தம்பிதுரை

webteam

இனிவரும் காலங்களில் மத்தியில் இருந்து தமிழகத்திற்குத் தேவையான நிதியுதவிகள் கிடைக்கும் என மக்களவை ‌துணை சபாநாயகர் தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுடன் இணைந்து தம்பிதுரை சாமி தரிசனம் செய்தார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், மத்தியில் ஆட்சியமைய அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார். மத்தியில் சாதகமான அரசு ஏற்படுவதால் தமிழகத்திற்குத் தேவையான நிதியுதவிகள் தாராளமாகக் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வாய்ப்பு உருவாகி உள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக இதுவரை மத்திய அரசு எந்த நல்லதும் தமிழகத்திற்கு செய்யவில்லை. கஜா புயல் பாதிப்புக்கு இன்னும் நிவாரணம் வந்து சேரவில்லை. ஜி.எஸ்.டியில் 5 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. பல்வேறு துறைகளின் நிலுவைத்தொகையாக சுமார் 9 ஆயிரம் கோடி உள்ளது. நீட் தேர்வில் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. இன்னும் மீனவர்கள் பிரச்னை இருக்கிறது. மேகதாது அணை கட்டக்கூடாது எனக் கூறிவருகிறோம். முல்லை பெரியாரில் மீண்டும் அணை கட்ட மத்திய அரசு பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது என அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீது முன்வைத்து வந்தார் தம்பிதுரை என்பது குறிப்பிடத்தக்கது.