தமிழக எல்லையிலுள்ள தளி தொகுதிக்கு, கர்நாடகா மாநில அரசியல் கட்சி தலைவர்கள் படையெடுத்து வருவதால், அம்மாநில தொகுதி போல் மாறி விட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.க வேட்பாளர் நாகேஷ்குமார் போட்டியிடுகின்றனர். கர்நாடகா - தமிழக எல்லையில் இத்தொகுதி உள்ளதால், கர்நாடகாவை சேர்ந்த, பா.ஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகின்றனர்.
பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நாகேஷ்குமார், மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிடன் உறவினர். அதனால், அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என, கர்நாடகா மாநில, பா.ஜ.கவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
அதன்படி கர்நாடகா மாநில அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, அசோக் மற்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, பொம்மனஹள்ளி எம்.எல்.ஏ., சதீஷ்ரெட்டி என, பலர் களத்தில் பணியாற்றுகின்றனர். பா.ஜ.கவை சமாளிக்க, இந்திய கம்யூனிஸ்ட் தங்களது மாநில செயலாளர் முத்தரசன், தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் மற்றும் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர் சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகளை இறங்கி உள்ளனர்.
தளி தொகுதியில், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் உள்ளதால், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னணி தலைவர்கள், இரு மொழிகளில் பேசி, ஓட்டு சேகரித்து வருகின்றனர். குறிப்பாக, கன்னட மொழிகளில் ஆதரவு திரட்டுகின்றனர். அதனால், தமிழக எல்லையிலுள்ள தளி தொகுதி, கர்நாடகா மாநில தொகுதிபோல் மாறி காட்சியளிக்கிறது.