டிரெண்டிங்

அதிமுகவை அழித்து அமமுகவால் வளர முடியாது! - தங்க தமிழ்செல்வன்

webteam

அதிமுகவை அழித்து அமமுகவால் வளர்ச்சி அடைய முடியாது என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரனுக்காக 18 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை துறந்தனர். அதில் தங்க தமிழ்செல்வனும் ஒருவர். அதிமுகவில் இருந்து வெளியேறிய பிறகு தினகரனுக்கு நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். 

தினகரன் தொடங்கிய அமமுக கட்சியில் பல்வேறு முடிவுகளை எடுப்பதில் தன்னை முதன்மையாக காண்பித்து கொண்டார் தங்க தமிழ்செல்வன். அமமுக சார்பில் மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதிலும் தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல், புகழேந்தி ஆகியோரே முன்னிலையில் இருந்தனர். 

இதையடுத்து மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் தோல்வியை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அமமுகவில் பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனிடையே அதிமுகவினர் கட்சியை விட்டு விலகியவர்கள் தாய் கழகத்தில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்து வருகின்றனர். டிடிவியை தவிர யார் வந்தாலும் அதிமுக ஏற்றுக்கொள்ளும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து வருகிறார். 

இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு எதிராக தங்க தமிழ்செல்வன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். டிடிவி தினகரன் குறித்து அமமுக நிர்வாகியிடம் போனில் தரக்குறைவாக பேசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து தங்க தமிழ்செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அதிமுகவை அழித்து அமமுகவால் வளர்ச்சி அடைய முடியாது என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், “என்னைப்பற்றி ஆடியோ வீடியோ அனுப்பது டிடிவி தினகரனின் தலைமை பண்புக்கு சரியல்ல. ஒன் மேன் ஆர்மியாக டி.டிவி செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருவார்கள், மீதி உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள். அமமுகவின் கூடாரம் காலியாகுமா என்பது தொண்டர்கள் கையில் தான் உள்ளது. கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் அவசியமா? எந்த கட்சியிலும் நான் சேரவிரும்பவில்லை. என்னை யாரும் அனுகவுமில்லை. ” எனத் தெரிவித்தார்.