அதிமுகவின் இரு இணைகளும் இணைவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு செல்வதாக இருந்த திட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இன்று இணையும் எனச் சொல்லப்பட்டது. அணிகள் இணைந்து அமைச்சரவையிலும் மாற்றம் வரும் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக இரு அணியினரும் தீவிரமாகப் பேசி வந்தனர். சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை இணைப்புக்கு முக்கிய நிபந்தனையாக ஓபிஎஸ் வைத்திருந்தார்.
இந்த நிலையில் சசிகலாவை நீக்குவதாக நேற்றே எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் சசிகலா நீக்கம் குறித்த தீர்மான நகலை அளித்தால் மடடுமே தலைமைக் கழகத்திற்கு வருவோம் என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அணிகள் இணைப்பில் தாதமம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்தியலிங்கம் எம்பியுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமை அலுவலகம் செல்வதாக இருந்த அவரது திட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.