டிரெண்டிங்

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

webteam

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நடக்கும் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும் தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கு ஆலோசனை கடிதம் எழுதியிருந்தது. அதில் மக்களவை தேர்தலுக்காக வாக்குபதிவு வரை உள்ள 48 மணி நேரத்திற்கு மதுபானக் கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்றும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் அறிவுறுத்திருந்தது.

இந்த நிலையில் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் இதற்கான அவர் உத்தரவையும் பிறப்பித்துள்ளார். அதில் தமிழகத்தில் வருகின்ற ‌16, 17 மற்றும் வாக்குப்பதிவு நா‌ளான 18 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.