டிரெண்டிங்

“இளம் தலைமுறை வாக்காளர்களே எங்கள் இலக்கு” - தமிழக நிர்வாகிகளிடம் மோடி பேச்சு

“இளம் தலைமுறை வாக்காளர்களே எங்கள் இலக்கு” - தமிழக நிர்வாகிகளிடம் மோடி பேச்சு

webteam

பாரதிய ஜனதா கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு என்றால் எதிர்கட்சிகள் கூட்டணி அமைக்க போராடுவது ஏன் எ‌‌ன பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடையவுள்ளது. எனவே ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன் ஏற்பாடுகள் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, மக்களவை தேர்தலையொட்டி, மாநில வாரியாக பாஜக நிர்வாகிகளோடு பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.

இந்நிலையில் சிவகங்கை, மயிலாடுதுறை, பெரம்பலூர் பகுதி பாரதிய ஜனதா நிர்வாகிகளோடு பிரதமர் நரேந்திர மோடி கானொலிக் காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார். மக்களவை தேர்தலையொட்டி எதிர்கட்சியினர் மிகவும் குழம்பியுள்ளனர் என்றும் மக்களுக்கு பாஜக மீது வெறுப்பு என்றால் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க போராடுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 

மக்களுக்கு பாரதிய ஜனதாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியும் ‌என்பதால் தங்களின் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டிய நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார். மேலும், “வளர்ச்சியை விரும்பும் இளம் தலைமுறை வாக்காளர்களிடம் அரசின் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள் என கூறிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டணி வைப்பதில் ஏன் குழப்பமடைகின்றன?. எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லையா?. ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் பாரதிய ஜனதா கட்சியின் மீது வலுவான நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் வளர்ச்சியை விரும்பும் இளம் தலைமுறை வாக்காளர்களிடம் அரசின் திட்டங்களை நிர்வாகிகள் எடுத்துரைக்க வேண்டும்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.