எம்.ஜி.ஆர் படத்தை பார்த்தால் குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ்வார்கள், ரஜினி - கமல் படத்தை பார்க்க முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற மே தின பொது கூட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்தார். செல்லூர் ராஜு பேசுகையில், “ தினம் தினம் ஒரு போராட்டம் நடத்தி தற்பொழுது காவிரிக்காக போராட்டம் நடத்தி வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் நடவடிக்கைகள் எடுத்து வரும் நேரத்தில் திமுக போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி ஒத்து ஊதுகிறது.
தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என வைகோ சொல்லி வருகிறார். வைகோ சென்ற இடம் எப்படி ஆகும் என உங்களுக்கு தெரியும். விஜயகாந்த்க்கு ஏற்பட்ட நிலை தான் ஸ்டாலினுக்கு வரும். திமுக ஆட்சி காலத்தில் ஸ்டாலின் மதுரைக்கு உள்ளே நுழைய முடியவில்லை. அதிமுகவின் ஒரே எதிரி திமுக மட்டுமே. தமிழர்களின் விரோத இயக்கமும் திமுக தான். முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரிபட்டு வர மாட்டார் (வடிவேல் காமெடி பாணியில்), திமுகவில் குடும்பத்துக்கு மட்டுமே பதவி, அடுத்ததாக உதயநிதி வந்து விட்டார்.
நலிவடைந்து வரும் போக்குவரத்துத்துறைக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வேலையை உறுதி செய்தது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் அவர்களது துறையில் போட்டி போட்டு வேலை செய்கிறோம், எங்கள் கைபேசியில் எப்போதும் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்சிக்கும் நடிகர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது. எம்.ஜி.ஆர் படத்தை பார்த்தால் குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ்வார்கள், ரஜினி - கமல் படத்தை பார்க்க முடியுமா. தமிழகத்தை நடிகர்கள் ஆள முடியாது, இந்தியா முழுதும் மோடி அலை என்றால் தமிழகத்தில் லேடி அலை இருந்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பிரதமர் ஆகி இருப்பார்” என்றார்.