கோமா நிலைக்குச் சென்றுவிட்ட தமிழக அரசு, இனி அதிலிருந்து மீள்வதற்கு வாய்ப்புகளே இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வரும் செப்டெம்பர் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அனைத்து கிராமம் மற்றும் நகரங்களில் பிரச்சார நடைபயணம் மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது தெரியாது. அவரே கடவுளிடம் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும்" என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர் "தமிழக கல்வித்துறை செயலாளராக இருக்கும் உதயசந்திரன் ஒரு நேர்மையான அதிகாரி. அவரை பந்தாட நினைக்கிறார்கள். தமிழக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். கோமா நிலையில் இருக்கும் இந்த அரசு இனி மீள்வதற்கு வாய்ப்பில்லை. உணவுப்பாதுகாப்பு சட்டம் சரக்கு மற்றும் சேவை வரி, காவிரி உரிமை உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயலலிதா எதிர்த்ததை எல்லாம் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் ஆதரிக்கிறார்கள். அதிமுகவை பிரிப்பதும் பின்னர் சேர்ப்பதுமான வேலைகளை பாஜக செய்து வருகிறது. அதிமுகவில் உள்ள பதவிச்சண்டையை பயன்படுத்தி பாஜக தங்களை வளர்த்துக்கொள்ள நினைக்கிறது" என்று முத்தரசன் குற்றஞ்சாட்டினர்.