கனிமொழி வீட்டில் நடந்த வருமான வரிச்சோதனையில் எவ்வித பணமும் கைப்பற்றப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டிற்கு நேற்றிரவு 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வருகை தந்தனர். கனிமொழியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். வீட்டிலிருந்து யாரும் வெளியேறவும், வீட்டுக்குள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்றது.
சோதனைக்கு பின் பேசிய கனிமொழி ''எங்களை அச்சுறுத்துவதாக நினைத்துக்கொண்டு சோதனை செய்கின்றனர். எந்தவித அடிப்படையிமின்றி சோதனை செய்துள்ளனர். தோல்வி பயத்தில் இந்த சோதனை செய்துள்ளனர். சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். அதில் கனிமொழி வீட்டில் நடந்த வருமான வரிச்சோதனையில் எவ்வித பணமும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் ''ஒரு எண்ணில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரிலேயே கனிமொழி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.