ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருக்கும் அனைத்து கட்சி கூட்டம் வெறும் அரசியல் கண்துடைப்பு நாடகம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். அதில், மேகதாது அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி தரக்கூடாது எனவும் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்ட நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேகதாது அணை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவிருக்கும் அனைத்து கட்சி கூட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார். மத்திய அரசை தொடர்ந்து குறை கூறுவது ஏற்புடையது அல்ல எனவும் பாஜக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுவதாகவும் குறிப்பிட்டார்.
பாஜகவின் அனைத்து செயல்பாடுகளும் அரசியலாக்கப்படுவதாகவும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது எனவும் தமிழிசை தெரிவித்தார்.