டிரெண்டிங்

“ஆயிரம் பேர் உயிரிழப்பதை தவிர்க்கவே 13 பேர் சுடப்பட்டார்கள்” - தமிழிசை தகவல்

rajakannan

13 பேர் சுடப்பட்டது 1000 பேர் உயிரிழப்பதை தவிர்க்கவே என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த அன்று 1000 உயிர்கள் பலியாகி இருக்க வேண்டியது. அப்படியொரு கொடூரமான வன்முறை நடந்து கொண்டிருந்தது. 13 உயிர்கள் சுடப்பட்டது வலிக்கிறதுதான். ஆனால், 13 பேர் சுடப்பட்டது 1000 பேர் உயிரிழப்பதை தடுத்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடையும் போது தீவிரவாதிகள், பயங்கரவாதிகளால் திசை திருப்பபடுகிறது. பயங்கரவாதிகளை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடங்கி இருந்தால் தூத்துக்குடி போராட்டம் இப்படி முடிந்திருக்காது” என்று கூறினார்.
 

            
எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எஸ்.வி.சேகர் மீது நிச்சயம் பாஜக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். யாரையும் காப்பாற்ற வேண்டும் என்றோ, கண் துடைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றோ எங்களுக்கு அவசியமில்லை. பெண்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். எஸ்.வி.சேகர் செய்தது தவறு என்பதை நான் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். தெரியாமல் பதிவிட்டுவிட்டேன் என்பதையெல்லாம் நான் ஏற்கவில்லை. நீதிமன்றத்தில் சட்டரீதியாக நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து கருத்து எதுவும் கூற முடியாது. எல்லோரும் சட்டத்தை நிச்சயம் மதிக்க வேண்டும். அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்றார். 

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். 120 ஆண்டுகளாக நீடித்த காவிரி பிரச்னையை தீர்க்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன” என்றார்.