ஒரு தீர்ப்பு வந்துவிட்டால், காங்கிரஸ் வேறு ஊழலே செய்யவில்லை என்று அர்த்தமா? என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கோவையில் புதிய தலைமுறையிடம் பேசிய தமிழிசை, “களத்தில் ஒரு குற்றச்சாட்டு இருக்கும்போது அதை முன்வைத்து தேர்தலை சந்திப்பது எப்போதுமே வழக்கம்தான். இன்று ஒரு தீர்ப்பு வந்துவிட்டதால் காங்கிரசார் ஊழல் செய்யவில்லை என்று அல்ல. இன்னும் 1.76 லட்சம் கோடி கணக்கும், கார்த்திக் சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. எங்களுக்கு தனிப்பட்ட வகையில் எந்தக் கருத்தும் இல்லை. நாட்டில் லஞ்சமும், ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.