நான் கற்றப்பரம்பரை, குற்றப்பரம்பரை அல்ல எனப் பதிவிட்டது எந்த உள்நோக்கத்துடனும் இல்லை என தமிழக பாஜக தலைவரும் தூத்துக்குடி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
நான் கற்றப்பரம்பரை, குற்றப்பரம்பரை அல்ல என பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட எம்.எல்.ஏ கருணாஸ், தமிழிசை சவுந்திரராஜனை கடுமையாக விமர்சித்தார். அவர் அறிக்கையில், “குற்றப்பரம்பரை என்பது அன்றைய ஆங்கிலேய அரசு குறிப்பிட்ட மக்களை முடக்குவதற்காக பயன்படுத்திய ஒடுக்குமுறை சொல்லாடல். அதை தன்னுடைய தொகுதியில் தேர்தலுக்காக, குறிப்பிட்ட சாதியினரை அவமானப்படுத்தும் விதமாக அச் சொல்லாடலை பயன்படுத்தியது ஏன்? வேட்பு மனுவையே சரிவர நிரப்ப தெரியாத நீங்கள் கற்றப்பரம்பரையா? ஓட்டு வாங்குவதற்காகவே இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஊரெல்லாம் சுவரொட்டி வழியாக நான் நாடார் என்று அறிவிப்பு செய்வது ஏன்? தேர்தல் பயத்தில் குற்றப் பரம்பரை எனத் தேவர் சமூகத்தை சீண்டி நாடார், தேவர் சமூகத்திற்குள் கலவரம் தூண்ட முயற்சி செய்கிறீர்களா? நீங்கள் தமிழர் உரிமைகளை மட்டுமின்றி; ஒட்டு மொத்த இந்தியாவையே அந்நியர்களுக்கு விற்றப் பரம்பரை என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்” என சாடியிருந்தார்.
இந்நிலையில் நான் கற்றப்பரம்பரை, குற்றப்பரம்பரை அல்ல எனப் பதிவிட்டது எந்த உள்நோக்கத்துடனும் இல்லை என தமிழக பாஜக தலைவரும் தூத்துக்குடி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தம் மீது குற்றவழக்குகள் ஏதும் இல்லை என்பதை தெளிவுபடுத்தவே அவ்வாறு பதிவிட்டேன். வருமான வரி மற்றும் ஊழல் வழக்குகளில் சிறை சென்றது போன்ற எந்தக் குற்றங்களும் என்மேல் இல்லை. ஆனால் எதிர் வேட்பாளர் எல்லா குற்றங்களையும் வைத்து கொண்டு என்னை குறை கூறினார்கள்.
மருத்துவ துறையில் நேர்மையாக இருக்க எனக்கு கற்றுக்கொடுத்தவர் என் கணவர். அவர்களை பற்றி இப்படி தவறாக கூறும்போது அப்படிபட்டவர்கள் இல்லை என்பதை பதிவு செய்வதற்கு குற்ற வழக்குகள் என்று கூறுவதற்கு பதிலாக அவ்வாறு பதிவிட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் பதிவு செய்யப்படவில்லை. தயவுசெய்து இதைவைத்து சில தவறான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டாம். பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் என்னிடம் இல்லை” எனத் தெரிவித்தார்.