ரஜினியின் அடுத்த கட்ட அரசியல் முடிவு குறித்து தான் ஒன்றும் கூற முடியாது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று தமிழருவி மணியன் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது அவர்கள் பல விஷயங்கள் குறித்து பேசியதாக தெரிகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ள நிலையில், தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், ரஜினிகாந்த் ஏப்ரல் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் கசிந்து வருகிறது.
இந்நிலையில் தமிழருவி மணியன் ரஜினியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மணியன், “ ரஜினியின் அடுத்த கட்ட நடிவடிக்கை குறித்து நான் ஒன்றும் தெரிவிக்க இயலாது. அதை அவரே தெரிவிப்பார். இந்தச் சந்திப்பு வழக்கமான ஒன்றுதான்” எனக் கூறினார்.