தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 13 டன் விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவது ஏன்? முறையாக கொண்டு செல்வதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?
இலங்கையில் உள்நாட்டு போர் ஓய்ந்த பிறகு, வேளாண் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதைத்தொடர்ந்து வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் மஞ்சள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற இலங்கை அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக மஞ்சள், கிராம்பு, ஏலக்காய், கசகசா, மிளகு, கடுகு, சீரகம் உள்ளிட்ட 11 பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
இதனால், தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு இலங்கையில் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. அதிலும் கொரோனாவுக்குப் பின் மஞ்சளை இலங்கை மக்கள் கிருமி நாசினியாக பயன்படுத்தி வருவதால், அங்கு ஒரு கிலோ மஞ்சள் சில்லறை விலையில் மூவாயிரத்து 700 ரூபாய்க்கும், மொத்த கொள்முதல் விலையாக 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாவதாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட தமிழக வியாபாரிகள் சிலர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இலங்கைக்கு படகு மூலம் அதிக அளவில் மஞ்சளை கடத்திச் சென்று விற்று, பணத்திற்கு பதிலாக தங்கமாக மாற்றிக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மிக அதிகமாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து மன்னார் வளைகுடா வழியாக இலங்கையின் நாலாவது மண் திட்டைக்கு இந்த கடத்தல் மஞ்சள் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் கடலில் 2 மீட்டர் அளவுக்கு மட்டுமே ஆழம் இருப்பதால், கடலோர காவல்படையினரின் கப்பல் அங்கு நெருங்கி வருவதில்லை. இதனால் கடத்தல்காரர்கள் மிக எளிதாக மஞ்சளை கடத்திச் செல்கின்றனர் என்றும் விசாரணையில் தெரியவருகிறது.
கடலில் ஆழம் இல்லாத காரணத்தால் படகு மூலம் செய்யப்படும் மஞ்சள் கடத்தலை ஹெலிகாப்டர் அல்லது தரையிலும் கடலிலும் செல்லக்கூடிய ஹோவர் கிராஃப்ட் மூலமாக மட்டுமே தடுக்க முடியும். தவிர மஞ்சள் உணவுப் பொருள் பட்டியலில் வருவதால், அதை பறிமுதல் செய்து, கடத்தியவர்களை வலுவான சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என்பதாலும், இந்த கடத்தல் விவகாரத்தை பெரும்பாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை இலங்கை கடற்படையால் நாலாம் மணல் திட்டை அருகே 685 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் தனுஷ்கோடியில் மட்டும் 11 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தலை தடுக்க ராமநாதபுரத்தில் ஆங்காங்கே தற்காலிக சோதனைச் சாவடிகளை காவல்துறையினர் அமைத்திருப்பதால், தற்போது, நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக மஞ்சள் கடத்தப்படுவதாக கடலோர குழும காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் வேதாரண்யம் அருகே பெரிய குத்தகையில் வசித்து வரும் முனீஸ்வரன் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ விரலி மஞ்சளை பறிமுதல் செய்தனர்.
பெரும்பாலும் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் ஏற்றி வரும் மஞ்சளை, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பெரிய கடைக்கு கொண்டு செல்வதாக கூறி, கடத்தல்காரர்கள் எடுத்துச் சென்று விடுகின்றனர். மேலும், உணவுப் பொருள் என்பதால், காவல்துறையினருக்கும் மஞ்சள் கடத்தல் நடப்பதில் பெரிய அளவில் சந்தேகம் ஏற்படுவதில்லை. இதனால் மஞ்சள் கடத்தலை எப்படி தடுப்பது என புரியாமல் விழிக்கின்றனர் காவல்துறையினர்.