டிரெண்டிங்

முடிவு வரும் முன் 'எம்.பி.யான' ரவீந்திரநாத் - ஆலய கல்வெட்டில் பெயர் பொறிப்பு

முடிவு வரும் முன் 'எம்.பி.யான' ரவீந்திரநாத் - ஆலய கல்வெட்டில் பெயர் பொறிப்பு

rajakannan

மக்களவைத் தேர்தல் முடிவுகள் 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்பியாகி விட்டதாக கல்வெட்டு வைத்திருப்பது தொகுதி மக்களை ஆச்சரியமடைய வைத்திருக்கிறது. 

தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் களத்தில் உள்ளார். நாளை மறுநாள் மீதமுள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து, மே 23ம் தேதிதான் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வாக்குகள் எண்ணப்படவில்லை, முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் எம்.பி ஆகிவிட்டார். அதாவது, ரவீந்திரநாத் பெயருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்ட அடிக்கல், குச்சனூரில் இடம்பெற்றுள்ளது. காசி அன்னபூரணி ஆலயத்துக்கு பேருதவி புரிந்ததாக கடந்த 16ஆம் தேதியிட்டு ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரகுமார், ஜெயபிரதீப் குமார் ஆகிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன.