டிரெண்டிங்

தன்மானத் தொண்டன் கொதிக்கத்தான் செய்வான்: முதல்வர் பழனிசாமி

தன்மானத் தொண்டன் கொதிக்கத்தான் செய்வான்: முதல்வர் பழனிசாமி

rajakannan

தாங்கள் மதிக்கும் தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் படம் எடுத்தால் தன்மானம் உள்ள தொண்டர்கள் அனைவரும் கொதிக்கத்தான் செய்வார்கள் என முதலமைச்சர் எடப்பாடி ‌பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்தின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்தது தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். மேலும் டிடிவி தினகரன் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் துரோகிகள் எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதை அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், “அதிமுகவினர் பேனரை கிழித்தார்கள் என்பது தவறு; பொதுமக்கள் ‌தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தலைவர்களை கொச்சைப்படுத்தும்போது தன்மானம் ‌உள்ள கட்சிக்காரன் கொதித்தெழுவான். 

படம் எடுக்க 900 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வருகிறது?. டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்றனர். டிக்கெட் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என துறைசார்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‌விலையில்லா பொருட்களை கொடுத்ததால் தான் அதிக மாணவர்கள் படிக்கின்றனர். இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பு 46.8% உயர்ந்திருக்கிறது. விலையில்லா மாடு, ஆடு கொடுத்ததால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்கிறார்கள்?” என்றார்.

மேலும், ‌அதிமுகவை உடைக்க சதி செய்து கொண்டிருக்கும் டிடிவி‌ தினகரன்தான் முதல் துரோகி என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். இதுகுறித்து பேசுகையில், “ஜெயலலிதாவின் உழைப்பால் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டார்கள். ஆட்சிக்கு துரோகம் செய்த 18 பேருக்கு இறைவன் தகுந்த தண்டனை அளித்திருக்கிறார். ‌18 எம்எல்ஏக்கள் கட்சிக்கும், ‌ஆட்சிக்கும் துரோகம் செய்தவர்கள். 18 சட்டமன்ற ‌தொகுதிகளிலும் தொய்வின்றி பணி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளிலும் அனைத்து பணிகளும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன” என்றார்.