டிரெண்டிங்

தமிழகத்தில் மொத்தம் 868 வேட்புமனுக்கள் நிராகரிப்பு : தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் மொத்தம் 868 வேட்புமனுக்கள் நிராகரிப்பு : தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர்

webteam

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வாங்கப்பட்ட வேட்புமனுக்களில் மொத்தம் 868 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ஆம் தேதி முதல் தொடங்கி 26 ஆம் தேதி மாலை 3 மணியுடன் நடைபெற்றது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில் நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், அமமுக வேட்பாளர்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் தமிழகம் முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதியிலும் மொத்தம் 1587 வேட்பு மனுக்கள் பெறபட்டது. அதில் 932 வேட்புமனுக்கள் ஏற்கபட்டுள்ளதாகவும், 655 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சாஹூ தெரிவித்தார். 

மேலும் தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக மொத்தம் 518 வேட்பு மனுக்கள் தாக்கலானதாகவும் அதில் 213 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 305 வேட்பு மனுக்கள் ஏற்கபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து பேசிய அவர், அதிகமாச்சமாக கரூர் மக்களவை தொகுதியில் 43 வேட்பாளர்கள் மனு ஏற்கபட்டுள்ளதாகவும், நீலகிரியில் குறைந்தபட்சம் 10 மனுக்கள் ஏற்கபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை 50.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக திமுக மீது 10 வழக்குகளும்,  அதிமுக மீது  9 வழக்குகளும்,  பாஜக மீது 2 வழக்குகளும், பாமக மற்றும்  மக்கள் நீதி மய்யம் கட்சி மீது தலா 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.