புதியதாக ட்விட்டர் கணக்கு ஆரம்பித்துள்ளார் டி.ராஜேந்தர். ஆரம்பித்த ஓரிரு நாளில் 1267 ட்வீட் போட்டு விட்டார்.
அரசியல்வாதிகள், நடிகர்கள் என எல்லோரும் ட்விட்டரில் இணைவது வாடிக்கையாகி வருகிறது. இந்த டிஜிட்டல் உலகத்தில் புதிய வருகையாக தன்னை இணைத்து கொண்டிருக்கிறார் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர். அதில் அவர் நியூமராலஜிபடி தனது ஆங்கில பெயருக்கான எழுத்துக்களை அமைத்துள்ளார். அவர் கணக்கு ஆரம்பித்த ஓரிரு நாளில் அதற்குள் 1267 ட்விட்டு போட்டுள்ளார். 3131 பேர் அவரை பின் தொடர தொடங்கியுள்ளனர். அத்துடன் அமைச்சர் திண்டுகல் சீனிவாசனுக்கு எதிராக ஒரு வீடியோ பதிவையும் இட்டுள்ளார். கூடவே எதுகை மோனையில் “அன்னிக்கு அப்பல்லோவில் சீனிவாசன் பாடுனாரு ஒரு பாட்டு..உண்மைக்கு போட்டாரு திண்டுக்கல்லு பூட்டு..இன்னிக்கு மந்திரிங்க சொன்னதெல்லாம் பொய்யின்னு போடுறாரு புது வேட்டு..மக்கள் யோசிப்பாங்களா இத கேட்டு..தேர்தல் வந்தா போடுவாங்களா சிந்திச்சு ஓட்டு” என்று பாட்டு படித்திருக்கிறார்.
அப்பா ட்விட்டருக்குள் புதியதாக கணக்கு ஆரம்பித்திருக்கிறார். இதற்கு சில நாட்கள் முன்புதான் அவரது மகன் சிம்பு தனது கணக்கை மூடி விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிட வேண்டிய செய்தி.