டிரெண்டிங்

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து மீன் வியாபாரம் செய்யும் துணை நடிகர்..!

kaleelrahman

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த துணை நடிகர் மீன் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.


திண்டுக்கல்லை அடுத்துள்ள என்.எஸ் நகரைச் சேர்ந்தவர் மெய்யப்பன். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்த இவர், சினிமா துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சென்னை சென்று சிவாஜி, வெண்ணிலா கபடி குழு, திட்டக்குடி, கோ, ஆயிரத்தில் ஒருவன், குள்ளநரி கூட்டம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணத்தால் திரைப்பட சூட்டிங் நிறுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் இழந்த மெய்யப்பன் தனது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு வந்து வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் இவரது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடையை வாடகைக்கு பிடித்து அதற்கு அட்வான்ஸ் கொடுத்து மீன் கடை நடத்த அதிக பணம் தேவைப்படும் என்பதால் நண்பரின் ஆலோசனைபடி ஏற்கெனவே ஆட்டோ ஓட்டி பழக்கம் இருப்பதால் பழைய ஆட்டோ ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கி, வண்டியின் பாடியில் மாற்றம் செய்து தற்பொழுது நாள்தோறும் தெருத்தெருவாகச் சென்று மீன் விற்பனை செய்து வருகிறார்.

மேலும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கரூர் சாலையில் மீன் வியாபாரம் செய்து வரும் இவர் மாலை நேரத்தில் சிக்கன் மீன் ஆகியவற்றை பொரித்து விற்பனை செய்து வருகிறார். இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை ஓட்டி வருகிறார். இந்த வேலைக்கு தனது மகனை உதவிக்கு வைத்துள்ளதால் செலவு குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.  கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் துவண்டு வீட்டில் முடங்கி விடாமல் வாழ்வதற்கு என்று புதிதாக ஒரு தொழிலை துவங்கி உள்ளார் மெய்யப்பன்.