சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கக் கோரி சுப்ரமணியன் சுவாமி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், எம்.பியுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஸ்கர் கடந்த ஜனவரி மாதம் 2014ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணிய சுவாமி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த அக்டோபர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அரசியல் நோக்கத்துடன் மனுத்தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி தற்போது மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சுப்ரமணியன் சுவாமி மனு மீது விளக்கம் அளிக்குமாறு டெல்லி போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.