டிரெண்டிங்

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி

rajakannan

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்ற சுப்ரமணியன் சுவாமியின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அரசியல் நோக்கத்துடன் மனுத்தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஸ்கர் கடந்த ஜனவரி மாதம் 2014ஆம் ஆண்டு தனியார் விடுதியில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி வாதிட்டார். இதனிடையே குறுக்கிட்ட நீதிபதி எங்கிருந்து உங்‌‌களுக்கு தகவல்கள் கிடைத்தன என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஏற்கனவே விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போது தங்களது கோரிக்கை தேவையற்றது எனவும் நீதிபதி கூறினார். அதே போல் நீங்கள் தொடுத்த வழக்கு பொதுநல வழக்கா? அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்டதா? எனவும் சரமாரியான கேள்விகளை நீதிபதி முன்வைத்தார். இறுதியில், சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.