டிரெண்டிங்

’போலீசார் என் வீட்டை கண்காணிக்கிறார்கள்’: நடிகை சுமலதா புகார்

’போலீசார் என் வீட்டை கண்காணிக்கிறார்கள்’: நடிகை சுமலதா புகார்

webteam

தனது வீட்டை போலீசார் கண்காணிப்பதாகவும், தன் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையத்திடம் நடிகை சுமலதா புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில், திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்த வர் சுமலதா. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் 1991 ஆம் ஆண்டு கன்னட நடிகர் அம்பரீஷை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் வசித்து வருகிறார். அம்பரீஷ் கடந்த வருடம் நவம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

இதையடுத்து வரும் மக்களவைத் தேர்தலில், அம்பரீஷ் போட்டியிட்ட, மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவதாக, சுமலதா கூறியிருந்தார். ஆனால், இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அந்தத் தொகுதியில் தமது மகன் நிகிலை களமிறக்கியுள்ளார். இந்நிலையில் சுயேச்சையாக அந்த தொகுதியில் போட்டியிடுகிறார் சுமலதா. அவருக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. கன்னட நடிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்

இந்நிலையில், தனது வீட்டை போலீசார் கண்காணிப்பதாகவும், தன் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையத்திடம் சுமலதா புகார் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிப்பதாக தேர்தல் ஆணையம் அவரிடம் தெரிவித்துள்ளது.