டிரெண்டிங்

மன அழுத்தம் நோயல்ல... ஆனால் நோய்களை உருவாக்கும்...

webteam

நம்மில் பெரும்பாலானோர் மன அழுத்த பிரச்னையை வாழ்வில் சந்திக்காமல் இல்லை. மன அழுத்தம் என்று தமிழில் சொல்லும் போது மிகப்பெரிய நோயாக உணரும் நாம், அதையே ஆங்கிலத்தில் ஸ்ட்ரெஸ் (stress) எனச் சர்வசாதாரணமாகச் சொல்லி விட்டு கடந்து செல்வதுண்டு. மன அழுத்தம் சில அடிப்படைக் காரணிகளால்தான் ஏற்படுகிறது என்று மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

மன அழுத்தம் குறித்து மனநல மருத்துவர் கண்ணன் கூறுகையில், 2016 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பணிக்குச் செல்லும் மனிதர்களில் 46 சதவிகிதத்தினர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இப்பிரச்னை பணிக்குச் செல்வோரோடு நின்றுவிடவில்லை. இன்றைய சூழலில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கூட மன அழுத்தத்தில் இருந்து தப்புவதில்லை. பென்சிலை கடிக்கும் பழக்கமுள்ள குழந்தைகள், பள்ளிகளில் மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் கோபத்துக்கு ஆளாகும் குழந்தைகள் இவர்களுக்குப் பின்னால் இருப்பதும் இதே மன அழுத்தம்தான் என்கிறார். 

மனநல ஆலோசகர் ரகுநாத், "இந்த மன அழுத்தம் ஒரு நோய் இல்லை, ஏன் குறைபாடு கூட இல்லை. நம்மை மீறிய பிரச்னைகள் ஏற்படும்போதும், அவற்றைக் கையாளும் திறன் இல்லை என நினைக்கும்போதும் அது மன அழுத்தமாக உருவெடுக்கிறது. மன அழுத்தம் ஒரு நோய் இல்லை என்ற போதும், மனதளவிலும், உடல் அளவிலும் பல நோய்களை ஏற்படுத்துவதிலும், அதிகரிப்பதிலும் மிக முக்கிய காரணியாக விளங்குகிறது என்பதால் மன அழுத்தப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது" என்கிறார்

அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை ருசிப்பது என்ற எண்ணத்தைத் தாண்டி, தோல்விகளையும் பழகிக்கொள்ள வேண்டிய தேவையும், அவசியமும் இருப்பதால், வெற்றி, தோல்விகளையும், கடின சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளக்கூடிய திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள் மனநல ஆலோசகர்கள்.