டிரெண்டிங்

விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள சசிகலாவின் கர்சன் எஸ்டேட்

விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள சசிகலாவின் கர்சன் எஸ்டேட்

webteam

கோத்தகிரி கோடநாடு சாலையில், ஈளாடா பிரிவில் இருந்து, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கர்சன் தேயிலை தோட்டம். மது சச்டே, ஜிதேந்திரா சச்டே, பங்கஜ் சச்டே மற்றும் அவர்களது சகோதரிக்கு சொந்தமானதாக இருந்த இந்த தோட்டம், பாகப்பிரிவினை பிரச்னையால், நீதிமன்ற படியேறி விற்கும் நிலை ஏற்பட்டது. ஏலத்தின் மூலம் 12 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது. இந்த எஸ்டேட்டை சசிகலா குடும்பத்தினர் வாங்கினர்.

568.18 ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்த எஸ்டேட். கொடநாடு எஸ்டேட் போலவே கர்சன் எஸ்டேட்டிலும் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. கர்சன் எஸ்டேட், க்ரீன் டீ எஸ்டேட் என பெயர் மாற்றப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு அது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்த எஸ்டேட்டை சசிகலா தரப்பினர் என்ன விலைக்கு வாங்கினர். இதில், கணக்கில் காட்டப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து, வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள, 306 சொத்துகளின் பட்டியலில், கோடநாடு தேயிலை எஸ்டேட் இடம் பெற்றுள்ளது. ஆனால், கர்சன் தேயிலை எஸ்டேட் பட்டியலில் இடம்பெறாததால், அங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

கோடநாடு மற்றும் கர்சன் தேயிலை எஸ்டேட்டின் நிர்வாகத்தில் சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர் ராவணன், இளவரசி ஆகியோருக்கு முக்கிய பங்குண்டு. கர்சன் எஸ்டேட்டின் மேலாளராக பணியாற்றும் பழனிகுமாரும், சசிகலா உறவினர்தான்.

கோடநாடு எஸ்டேட் நிர்வாகம், நீதிமன்ற கஸ்டடியில் இருப்பதால், எந்நேரமும் அந்த எஸ்டேட் மீது நீதிமன்ற நடவடிக்கை பாயும் என்ற நிலையில், அந்த எஸ்டேட் சார்ந்த ஆவணங்கள், விலையுயர்ந்த பொருட்கள், கர்சன் எஸ்டேட்டிற்கு இடம் மாற்றப்பட்டிருக்குமோ என்று சந்தேகிக்கும் வகையில் பல முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் தொடர் விசாரணை வளையத்திற்குள் கர்சன் எஸ்டேட் சிக்கியுள்ளது என கூறப்படுகிறது.