டிரெண்டிங்

அரசியல் வானில் ஆர்.கே.நகர்: தொடர்ந்து 3-வது ஆண்டாக தேர்தலை சந்திக்கிறது..!

அரசியல் வானில் ஆர்.கே.நகர்: தொடர்ந்து 3-வது ஆண்டாக தேர்தலை சந்திக்கிறது..!

Rasus

ஆர்.கே.நகர்.... தமிழகத்தில் இந்த தொகுதியை போன்ற பிரபலமான, அதிகம் பேசப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி வேறு எதுவும் இல்லை. 2015 மற்றம் 2016-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா நின்று வெற்றி பெற்ற இத்தொகுதி தற்போது மீண்டும் ஒரு தேர்தலை சந்தித்திருக்கிறது.

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் நட்சத்திர தொகுதியாக மாறியது கடந்த 2015-ம் ஆண்டுதான். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியில் தொடர எம்எல்ஏ ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு வசதியாக அப்போதைய தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்தேர்தலில் ஜெயலலிதா ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சாதனை வெற்றி ஈட்டினார்.

பிறகு 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதே ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் களமிறங்கினார் ஜெயலலிதா. அதில் அவர் 39,537 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக பிளவுபட்டு இரட்டை இலை முடக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மதுசூதனனும், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் களமிறங்கினர். திமுக சார்பில் மருதுகணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கங்கை அமரன் உள்ளிட்ட 62 பேர் களம் கண்டனர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதற்கிடையில் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் 45,819 பெயர்கள் போலியானவை என கண்டறிந்து நீக்கியதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றம் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ரத்து செய்யப்பட்ட தேர்தலை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி தொடர்ச்சியாக 3 ஆண்டுகளில் சந்திக்கும் 4-வது தேர்தல் இதுவாகும்.